மத்திய லண்டனுக்கு அண்மையில் Ealing - Chappal Road பகுதியில் மிகச் சிறியதொரு இடத்தில் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் காணப்படுகிறது. சிறிய இடப்பகுதியாக இருந்தாலும் அம்பாளின் கீர்த்தி பெரியது என்பதை தினசரி அம்பாளைத் தரிசிக்கவரும் பக்தர்களின் எண்ணிக்கையை வைத்தே தீர்மானிக்கலாம். வெளிப்புறப் பார்வைக்கு உள்ளே ஒரு கோவில் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் வழமையான லண்டன் சுற்றாடலில் உள்ளதைப்போன்று வீடுகள் நெருக்கமாக உள்ள இடத்தில் கோவில் அமைந்துள்ளது. நம்மவர்கள் மிக அதிகமாக வாழும் Tooting, Mitcham போன்ற பகுதிகளிலிருந்து 53 நிமிடம் பயணித்தால் Ealing இல் உள்ள ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தைச் சென்றடையலாம்.
கிழக்குப் பார்த்த கோயில்; ஒரு முகப்பு வாசல் வாசற் சுவரின் மேலாக சிவன் பார்வதி திருமணக்காட்சி சீமெந்துச் சிற்பமா; வாசலைத் தொடர்ந்து வடக்குத் தெற்கான ஒரு மண்டபம் வாகனங்கள் வைக்குமிடம், உணவு பரிமாறப்படும் இடம், ஒரு பக்கமாகவுள்ள சமயலறை (பிரசாதம் தயாரிக்கும் இடம்), களஞ்சிய அறை போன்ற அனைத்துத் தேவைகளின் மையமாக இந்த மண்டபம் அமைவதால் இதனை ஒரு பல்நோக்கு மண்டபம் என்றே கூறலாம்.
இந்த மண்டபத்திலிருந்து உள்ளே செல்லும் ஒரு அகன்ற வாசல். இந்த முகப்பு வாசலின் உட்புறமாக - கருவறைக்கு நேராக – மேலே, துர்க்கை அம்பாளின் பல்வேறு தோற்றங்கள். மகிசாகர துர்க்கை, மகா துர்க்கை, ஜல துர்க்கை, விஷ்ணு துர்க்கை, ருத்திர துர்க்கை, நல துர்க்கை, சூலினி துர்க்கை, மகிசாசுரவர்த்தினி என வரிசையாக துர்க்கையின் அவதாரங்கள் உள்ளன.
மையத்தில் கருவறை, கருவறைக்கு மேலே கட்டப்பட்டுள்ள 5 அடுக்கு விமானம் இடதத்திற்கு ஏற்றபடி சிறியதாக அமைத்துள்ளார்கள். கருவறையின் உள்ளே ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நின்ற திருக்கோலத்தில் நிறைந்த அலங்காரத்துடனும், நிறைவான தோற்றப் பொலிவுடனும் அருள்பாலிக்கிறாள். அம்பாளின் முகப்பொலிவும் வசீகரமும் பார்ப்போரை மயங்க வைக்கும் கொள்ளை அழகு. நம்மை மறந்து கைகூப்பித் தொழுது நிற்கிறோம். கருவறையின் மூன்று பக்கச் சுற்றுச் சுவரின் மாடங்களிலும் இலக்குமி, நாகபூஷணி சரஸ்வதி உள்ளனர். கருவறைக்கு முன்பாக சிறிதளவே உயரமான கொடிமரம் - சிம்மம் - பலிபீடம் ஆகியவையும் உள்ளன. கருவறையின் இடது பக்கமாக வழமையான இடத்தில் சண்டிகேஸ்வரியின் சந்நிதி காணப்படுகிறது
தென்மேற்கு மூலையிலிருந்து பார்த்தால் பிள்ளையார், சிவன் (லிங்க வடிவில்) கிருஷ்ணன் – ராதை, முருகன் சந்நிதிகள் உள்ளன. ஒவ்வொரு சிறிய சந்நிதியையும் சுற்றிவரக் கூடியதான இடைவெளிகள் காணப்படுகின்றன. முருகன் சந்நிதிக்கு அருகாக உள்ள சிறிய இடத்தில் முத்து – மணிகள் பதிக்கப்பட்ட சிறிய ரதம் (தேர்) நிறுத்தப்பட்டுள்ளது.
வடமேற்கு மூலையிலிருந்து குருவாயூரப்பன், சிவகாமசுந்தரி சமேத நடராஜர், ஐயப்பன் நால்வர் சந்நிதிகள் உண்டு. நால்வர் சந்நிதிக்கு வெளியே பிரேம் பண்ணப்பட்ட அறுபத்து மூவர் படம் சுவரை அலங்கரிக்கிறது. அடுத்திருப்பது தெட்சணாமூர்த்தியின் சந்நிதானம். கல்லால மர நிழலின் கீழ் உபதேசம் பெற்றுக்கொள்ளும் சனகர், சனாந்தரா், சனந்தரர், சனக்குமாரா் ஆகிய நான்கு முனிவர்களும் தெட்சணாமூர்த்திக்கு முன்னே அமர்ந்திருக்கின்றனா். வடகிழக்கு மூலையில் நவக்கிரகம். நவக்கிரகத்தின் பின்புறம் உள்ள ஒதுக்கத்தில் சிறிய இடத்தில் யாகசாலை உள்ளது. மேற்குப் பார்த்தபடி வைரவா் அமர்ந்துள்ளார். அருகே உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டிருக்கும் சிறிய வசந்த மண்டபம்.
இந்த வசந்த மண்டபத்திலிருந்துதான் விழாக் காலங்களில் புறப்படும் உற்சவ மூர்த்திகள் ஒன்றை வீதியைச் சுற்றி வருகின்றன.
ஏனைய கோவில்களைப் போலல்லாமல் சிறியதொரு இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் கருவறையின் அமைப்பும் – ஒற்றைப் பிரகாரத்தில் அந்தந்த இடங்களில் அமைந்துள்ள சிறிய சந்நிதிகளும் – சந்நிதிகளின் உள்ளே ஒரே அளவிலான சிறிய மூர்த்தங்களும் – சுத்தமான பிரகாரமும் நம்மவர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது.நாம் அம்பிகையைத் தரிசிக்கச் சென்றிருந்தவேளை பிரம்மோற்சவதத்தின் 10ஆம் திருவிழா. தம்பப் பூசை, அஸ்திரதேவர் உள்வீதி வலம் முடிய இனியநாதஸ்வர இசையுடன் வசந்தமண்டபப் பூஜை, பூசை முடிந்ததும் சிறிய கேடகத்தில் அம்பாள் முன்னேயும் கணபதியும் முருகனும் இணைந்தபடி பின்னேயும் தொடர வீதி வலம் வந்து திருவிழாவின் சகல நடைமுறைகளும் கச்சிதமாக நடந்தேறின.
விபூதி பிரசாதம் வழங்கப்படுவதற்கு முன்னரே முன் மண்டபத்தில் மதிய போசனம் ஆரம்பமாகிவிட்டது. நீளமான வாங்குகளில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், தக்காளிச் சாதம், சாதம் – கறிவகைகள், பழங்கள் என பலவகைப்பட்ட உணவு வகைகளில் நாம் விரும்பியதை அளவு எடுத்துக்கொண்டு, அனைவரும் தாம் விரும்பிய இடத்தில் தரையில் அமர்ந்தபடி உணவு உட்கொள்ளுகின்றனா். தரையில் அமர முடியாதவர்களுக்காகவும் முதியோருக்காகவும் கதிரைகளும் வைக்கப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தின் தேர்த்திருவிழா மிகப் பிரபல்யமானது. தேர்த்திருவிழா எப்போதும் ஒரு ஞாயிற்றுக்கிழமை வரக்கூடியதாகவே விழாக்காலம் அமைவதால் லண்டனின் பல பாகங்களிலிருந்தும் நம்மவர்கள் பல்லாயிரக் கணக்கில் கூடுகிறார்கள். தேர்த்திருவிழாவன்று மட்டுமே அம்பிகை கோவிலுக்கு வெளியே வந்து தேரேறிய கிட்டிய வீதிகளினூடக வலம் வருகிறது. ஈலிங் பொலிசார் இந்தத் தேர் ஊர்வலத்திற்கான வீதி ஒழுங்குகளை மிகக் கச்சிதமாக செய்து கொடுப்பதுடன், ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அனைவரும் மெச்சும்படியாக கவனிக்கின்றனா். தேரேறும் அம்பிகையை நேரில் தரிசிப்பவர்களைவிட, பல்வேறு தனியார் தொலைக்காட்சியிலும் நேரலையாகப் பலரும் பார்த்து மகிழ்கின்றனா். பொதுவாகக் கூறின் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய பிரமோற்சவமும் தேர்த்திருவிழாவும் புலம்பெயர் சைவர்களின் தனிச்சிறப்பான விழாவாகவே அமைகிறது.
Comments